

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ள சூழலில் வேட்பாளர்கள் யாத்திரையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணிக்கும், திமுக, காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அடங்கிய கூட்டணிக்கும் இடையில் கடும் மோதல் உள்ளது.
முக்கியமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த 70 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலால் 20 நாட்களுக்கும் மேலாகத் தீவிரப் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் இறங்கினர். 6-ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று தொகுதி வாரியாக ஒவ்வொரு கட்சியும், வேட்பாளர்களும், அவரது ஆதரவாளர்களும் விவாதித்து அடுத்த கட்டத்துக்கு இறங்கியுள்ளனர்.
வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதனிடையே, 20 நாட்களுக்கு மேல் இடைவெளி உள்ளது. இந்நிலையில், தேர்தலில் வெல்ல வேட்பாளர்கள் பலரும் யாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது. தற்போது தேர்தலில் போட்டியிட்ட பலரும் ஆதரவாளர்கள், கட்சியினர் தொடங்கி வெற்றி வாய்ப்பு தொடர்பாக விவாதித்து ஓய்ந்துவிட்டனர்.
அடுத்தகட்டமாக யாத்திரை செல்லத் தொடங்கியுள்ளனர். தங்கள் குலதெய்வக் கோயிலில் பல வேட்பாளர்கள் வழிபாடு நடத்திவிட்டுத் தங்களின் விருப்ப தெய்வங்களைக் குடும்பத்தோடும், நெருங்கிய ஆதரவாளர்களுடனும் வழிபடச் சென்றுள்ளனர்.
புதுச்சேரி வேட்பாளர்களில் பலரும் சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயில், வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சாமியார் கோயில், திருச்செந்தூர் முருகன், பழனி முருகன், திருப்பதி, கொல்லூர் மூகாம்பிகை, ராமேஸ்வரம், மாசாணியம்மன் கோயில் எனத் தீவிர ஆன்மிக யாத்திரையில் தேர்தல் வெற்றிக்காக ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.