

சென்னையில் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கியது. அப்போது அமல்படுத்தப்பட்ட பலகட்ட ஊரடங்கால் மெல்ல மெல்லத் தொற்றின் தீவிரம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பெரும்பாலான பொதுமக்கள் கடைப்பிடிக்காததால் இந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கம் முதல் தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
நேற்றைய (ஏப்.11) நிலவரப்படி தமிழகம் முழுவதும் 6,618 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,124 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 33 ஆயிரத்து 434 பேராக அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 41 ஆயிரத்து 955 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 22 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 908 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 146 தெருக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாகவும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 8 தெருக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 5 நாட்களுக்கு முன்னதாக சுமார் 600 ஆகவும், தமிழகம் முழுவதும் சுமார் 800 ஆகவும் இருந்தது. தற்போது தமிழகத்தில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட தெரு அல்லது குடியிருப்பில் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அப்பகுதி கட்டுபாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, உள்ளாட்சி நிர்வாகத்தின் தீவிரக் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படும். இந்நிலையில், சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.