

புதுச்சேரியில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 512 பேருக்குத் தொற்று உறுதியானதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். குணமடைவோர் சதவீதமும் புதுச்சேரியில் குறையத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து ஒற்றை இலக்கத்தை அடைந்தது.
தற்போது கரோனா 2-வது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 200-ஐத் தாண்டி வந்தது. இந்நிலையில், இன்று முதல் முறையாக தொற்று எண்ணிக்கை 512 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் நேற்று (ஏப்.11) 3,451 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக, 512 பேருக்கு இன்று (ஏப்.12) தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 403, காரைக்காலில் 86, ஏனாமில் 16, மாஹேவில் 7 பேர் புதிதாகத் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறையும் குணமடைவோர் சதவீதம்
புதுச்சேரியில் 147, காரைக்காலில் 79, மாஹேவில் 6 பேர் என 232 பேர் சிகிச்சையில் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கடந்த மார்ச் 12-ம் தேதி புதுச்சேரியில் குணமடைவோர் சதவீதம் 97.86 சதவீதமாக இருந்தது. இன்றோ இச்சதவீதம் 92.62 சதவீதமாகச் சரிந்துள்ளது.
கரோனா சிகிச்சையில் மொத்தமாக 2,594 பேர்
புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 44 ஆயிரத்து 555 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரத்து 268 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 547 பேர் தொற்றுடன் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். புதுவையில் 1,489, காரைக்காலில் 450, ஏனாமில் 47, மாஹேவில் 61 பேர் என 2,047 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 2,594 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவுக்கு 691 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், புதுச்சேரி ஆனந்தா நகரைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி, காரைக்காலைச் சேர்ந்த 53 வயது ஆண் என 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 693 ஆக உயர்ந்துள்ளது.