

திருவிழாக்களில் தளர்வுகளுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நாடகக் கலைஞர்கள் சங்கங்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் நாடக நடிகர் சங்கம் சார்பில் தாரை தப்பட்டை உள்ளிட்ட பல்வேறு இசைக் கருவிகளை வாசித்து, நாரதர், எமதர்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து, நடிகர்கள் இன்று (ஏப்.12-ம் தேதி) ஊர்வலம் வந்தனர். அதையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் நாள் பெட்டியில் அவர்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
''கரூர் மாவட்டத்தில் நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் 1,000 பேர் வாழ்ந்து வருகிறோம். கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாகத் திருவிழாக்களை நடத்தத் தடை விதித்ததால் கலை நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானோம். கடந்த ஆண்டு வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் நிகழாண்டு கலை நிகழ்ச்சி மூலம் சரி செய்துகொள்ளலாம் என எண்ணியிருந்தோம். நிகழாண்டும் திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கலை நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்பில்லாத காரணத்தால், நாடகக் கலைஞர்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளோம்.
நிகழாண்டும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை என்றால் நாடக, நாட்டுப்புறக் கலைஞர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சி நடத்தி, அந்த வருமானத்தைக் கொண்டு எங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.
மற்ற துறைகளில் 50 சதவீதத் தளர்வு கொடுத்ததுபோல எங்களுக்கும் அந்தச் சலுகைகளை அறிவிப்பதன் மூலம் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கினால் தனி நபர் இடைவெளியுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம். இதற்கு அனுமதி வழங்க இயலாவிட்டால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.10,000 வழங்கவேண்டும்''.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடகக் கலைஞர்கள் சங்கம்
அதேபோல கரூர் நாடகக் கலைஞர்கள் அளித்த மனுவில், ''கரோனா தொற்றால் கடந்த ஆண்டு முதல் நிகழாண்டில் இதுவரை நாடகம் நடத்த முடியவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் திருவிழாக்களில் நாடகம் நடத்த விதிகளில் தளர்வு அளித்து அனுமதி வழங்க நடவடிக்கை வேண்டும். அவ்வாறு வழங்கினால், தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்து, பாதுகாப்பாக நாடகங்களை நடத்திக் கொள்வோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.