தேர்தலில் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் நீக்கம்: ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி

முதல்வருடன் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
முதல்வருடன் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராகச் செயல்பட்ட புதுக்கோட்டை அதிமுக நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து இன்று (ஏப்.12) நீக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலின்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலை மாற்ற வேண்டும் என அக்கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர், மக்களைத் திரட்டி சில நாட்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரச்சாரத்துக்கு வந்த தமிழக முதல்வர் பழனிசாமியின் வேனையும் மறிக்க முயற்சி செய்தனர்.

இதுபோன்ற போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தி வந்தவர்களில் ஒருவரான கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் டி.பாண்டியனுக்குக் கட்சியில் ஒன்றியச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் போராட்டத்தைக் கைவிட்டதோடு, தர்ம.தங்கவேலுக்கு ஆதரவாகவும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதேபோன்று, அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் நெவளிநாதன், ஆலங்குடி தொகுதி வேட்பாளரை மாற்ற மறுக்கும் அமைச்சர் சி.விஜயபாஸ்ரை எதிர்த்து அவர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். பின்னர், அவரோடு சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து தனது வேட்பு மனுவை நெவளிநாதன் வாபஸ் பெற்றார்.

ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றாத அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக, மறைந்த முன்னாள் அமைச்சர் வடகாடு எ.வெங்கடாசலம் மகள் தனலட்சுமி, விராலிமலை தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்கினார். தனது வேட்பு மனுவை வாபஸ் பெறாமல் தேர்தலைச் சந்தித்தார்.

இந்நிலையில், அதிமுக விவசாய அணி மாவட்டச் செயலாளர் என்.மாசிலாமணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கே.ஆர்.கணேசன், அவரது மகனும் புதுக்கோட்டை 41-வது வார்டு செயலாளருமான கே.ஆர்.ஜி.பாண்டியன் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராகவும், தனலட்சுமிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் பரிந்துரையின் பேரில் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாகச் செயல்பட்ட மாசிலாமணி, கணேசன், பாண்டியன், தனலட்சுமி ஆகியோர் அதிமுகவின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இதேபோன்று, அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராகவும், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட அதிமுகவினர் சிலர் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்பட உள்ளதாகவும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. தேர்தல் முடிவு வெளியாவதற்குள் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு வருவது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in