

உரம் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
50 கிலோ மூட்டை டிஏபி உரம் ரூ.1,200-ல் இருந்து ரூ.1,900 ஆகவும், காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை ரூ.900-ல் இருந்து ரூ.1,800 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
உரம் விலை உயர்வுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 70 பேர், அதன் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில், இன்று (ஏப்.12) ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பிரதான நுழைவுவாயில் முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்குத் தலைமை வகித்த அய்யாக்கண்ணுவை ஆட்சியரிடம் மனு அளிக்க வருமாறு போலீஸார் அழைத்தனர். ஆனால், அய்யாக்கண்ணு மறுத்தார். இதனால், கோபமடைந்த கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் மணிகண்டன், "போலீஸாரிடம் ஒப்பாரி வைப்பதை நிறுத்துங்கள். ஆட்சியரிடம் மனு கொடுத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிட்டால் உங்கள் பின்னால் விவசாயிகள் வர மாட்டார்கள் என்றுதானே மனு அளிக்க மறுக்கிறீர்கள்" என்றார்.
அய்யாக்கண்ணு போலீஸாரை நோக்கிக் கூறும்போது, "உர விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. விலையைக் குறைக்க ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை. உரம் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். போராடுவதற்காக டெல்லிக்குச் செல்ல முயன்றால் தொடர்ந்து தடுத்து வருகிறீர்கள். எனவே, ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.
ஒரு கட்டத்தில் போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நேரிட்டது. இதனால், தங்களைச் சுற்றி போலீஸார் அமைத்திருந்த இரும்புத் தடுப்புகளை அகற்ற விவசாயிகள் முயற்சி செய்தபோது, போலீஸார் தடுக்க முயன்றனர். இதனால், இரு தரப்பினர் இடையே கடும் தள்ளுமுள்ளு நேரிட்டது.
அந்த நேரத்தில் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற செய்தி - மக்கள் தொடர்பு உதவி இயக்குநர் காரை விவசாயிகள் சிலர் மறித்துப் படுத்துக் கொண்டனர். போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாகத் தூக்கி அப்புறப்படுத்தினர்.
பின்னர், ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினியைச் சந்தித்து மனு அளித்துவிட்டு வந்த அய்யாக்கண்ணு, "மத்திய அரசின் உத்தரவு வரும் வரை திருச்சி மாவட்டத்தில் உர விற்பனை நிறுவனங்கள் பழைய விலைக்கே உரம் விற்பனை செய்யப்படும் என்றும், கூடுதல் விலைக்கு விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதி அளித்தார். இதன்பேரில், போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம். மேலும், நாங்கள் டெல்லிக்குச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை என்றும் ஆட்சியர் கூறினார்" என்றார்.