

தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட துறைகளின் செயலாளர்கள், அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கியது. அப்போது அமல்படுத்தப்பட்ட பலகட்ட ஊரடங்கால் மெல்ல மெல்ல தொற்றின் தீவிரம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பெரும்பாலான பொதுமக்கள் கடைப்பிடிக்காததால் இந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கம் முதல் தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
நேற்றைய (ஏப்.11) நிலவரப்படி தமிழகம் முழுவதும் 6,618 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,124 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 33 ஆயிரத்து 434 பேராக அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 41 ஆயிரத்து 955 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 22 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 908 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று (ஏப். 12) ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர் பழனிசாமி வருகை தந்தார். தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்குப் பின் தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் பழனிசாமி வந்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட துறைகளின் செயலாளர்கள், அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 10-ம் தேதியிலிருந்து சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பிக்கும் நிலையில் இக்கூட்டத்தில் அதுகுறித்த முடிவுகளும் எடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனை படுக்கை வசதிகள், கரோனா தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் கரோனா தொற்று இன்னும் வேகமெடுத்தால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தமிழக அரசு எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் காபந்து அமைச்சரவைக்கு முடிவெடுக்கும் அதிகாரமில்லை. தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அத்துடன் கரோனா பரவல் உச்சகட்டத்தில் இருப்பதால் முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.