

தஞ்சாவூர் மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள், மேடை மெல்லிசைக் கலைஞர்கள், கிராமியக் கலைஞர்கள் இன்று (ஏப்.12) காலை தஞ்சாவூர் ரயிலடியில் தாரை தப்பட்டை, மேளதாளத்துடன் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ''கரோனா பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் கோயில் திருவிழாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்தத் திருவிழாக்களில் தொடர்புடைய நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிகழ்ச்சிகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனால், இந்தத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியுள்ள தமிழகத்தில் சுமார் 4 லட்சம் கலைஞர்களும், அவர்களோடு தொடர்புடைய 10 லட்சம் மக்களும் பாதிக்கக்கூடிய சூழல் உள்ளது.
ஏற்கெனவே கடந்த ஓராண்டு காலமாக ஊரடங்கு காலத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கலைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணத்தை வழங்குவதோடு இல்லாமல், குறிப்பிட்ட நிபந்தனைகளோடு இசை நிகழ்ச்சிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும்'' என வலியுறுத்தி நாட்டுப்புறக் கலைஞர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மனுவையும் மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கினர்.