

திருச்சி மாநகரில் இன்று காலை அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் முதலே கடும் வெயில் வாட்டி வருகிறது. குறிப்பாக, வானிலை மைய அறிக்கையின் அதிகபட்ச வெயில் பதிவு பட்டியலில், திருச்சி தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெயிலால் திருச்சி மாநகர மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே, குமரிக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஏப்.12 முதல் ஏப்.15 வரை, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில், திருச்சி மாநகரில் இன்று (ஏப். 12) காலை 6.50 மணியளவில் மிதமாக தொடங்கி, காலை 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது.
திருச்சி விமான நிலையப் பகுதியில் 7.5 மில்லி மீட்டரும், திருச்சி நகரில் 4 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது. இந்த மழையால், கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமையால் வாடி வதங்கிய மாநகர மக்கள், குளிர்ச்சியான சூழலை அனுபவித்தனர்.
அதேவேளையில், புதை சாக்கடை பணி முடிந்த பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாத நிலையில், மழை ஓய்ந்த பிறகு சேறும் சகதியுமாக சாலைகள் இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.