

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால், மீண்டும்காங்கிரஸ் வேட்பாளரே போட்டியிடுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வட சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் உ.பலராமனின் 75-வது பிறந்தநாள் விழா, தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்றதமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி, உ.பலராமனை வாழ்த்தி பேசினார். கட்சியின் மாநிலதுணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலர்இல.பாஸ்கர், வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் அழகிரி கூறியது:
வேளச்சேரியில் பணியாளர்கள்,வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏன் எடுத்துச் சென்றனர் என்பதற்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து தெளிவான விளக்கம் வரவில்லை.
மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 6 கோடி தடுப்பூசியை வெளிநாட்டுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய மக்களின் உயிர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தராமல், எந்த அடிப்படையில் வெளிநாட்டுக்கு தடுப்பூசியை அனுப்பும் கொள்கை முடிவை பிரதமர் மோடி எடுத்தார் என்பது குறித்து அவர் பதிலளிக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். வாக்கு எண்ணிக்கையில் அவர் வெற்றி பெற்றால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும். அதில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும்.