

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை ஆகம விதிப்படி கோயில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தலைமைச் செயலருக்கு கோயில் தக்கார் கடிதம் அனுப்பி உள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி ஏப்ரல் 15 முதல் 25-ம் தேதி வரை பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற நிகழ்வுகளை பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்த கோயில் நிர்வாகம் நடத்த முடிவெடுத்தது. கரோனா 2-வது அலை பரவலால் விழாக்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், கோயில் தக்கார்கருமுத்து டி.கண்ணன், தமிழக தலைமைச் செயலர் ராஜீவ்ரஞ்சனுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
சித்திரைத் திருவிழா ஏப்ரல்15 முதல் 25 வரை நடைபெறும்.கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் விழா நடக்கவில்லை. தற்போது ஆகம விதிப்படி திருவிழாக்கள், பூஜைகளை நடத்த பட்டர்கள் முனைப்புடன் உள்ளனர். எனவே,கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி விழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும்.