

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், நடப்பு ஆண்டு இக்கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த் திருவிழாவின் தொடக்கமாக நேற்று காலை 8.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 5 மணிக்கு அபிஷேக மண்டபத்தில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் இருந்து அம்மன் மரக்கேடயத்தில் புறப்பாடாகி 2-வது பிரகாரத்தை வலம் வந்து அபிஷேக மண்டபத்தை சேர்ந்தார். பின்னர் அர்த்தசாம பூஜை நடைபெற்று, இரவு 8 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.
சித்திரை திருவிழாவையொட்டி, நாள்தோறும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடாகி 2-வது பிரகாரத்தை வலம் வருவார்.
இந்த உற்சவ காலங்களில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.20-ம் தேதி காலை 10.31 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் 2-வது பிரகாரத்தை வலம் வந்து, அபிஷேக மண்டபத்தை சேர்வார். இந்த நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் ஊழியர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் தேரோடும் வீதிகளில் தேர்த் திருவிழா நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.