ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மறைவுக்கு - முதல்வர் உட்பட தலைவர்கள் இரங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மறைவுக்கு - முதல்வர் உட்பட தலைவர்கள் இரங்கல்
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன். வழக்கறிஞர், எளிமையானவர் பழகுதற்கு இனிய பண்பாளர். மாதவராவ் மறைவால் துயருறும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவின் வெற்றிஉறுதியாகியுள்ள நிலையில் அவரது திடீர் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு செய்திஅறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனாவுக்கு தடுப்பூசிகள் வந்து விட்ட பிறகு தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி, சானிடைசர், கிருமிநாசினி தெளிப்பது என எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன்: ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது திடீர் மறைவு அத்தொகுதி மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது இழப்பைத் தாங்கும் மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன் அவரதுகுடும்பத்தினருக்கும், காங்கிரஸ்கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்கும் வழங்கிடவும், அவரது ஆன்மா நற்கதியடையவும் பிரார்த்திக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in