

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில், ‘மக்னா’ யானை உயிரிழந்தது.
பென்னாகரம் வட்டம் ஒகேனக் கல் வனச்சரக பகுதிக்கு உட்பட்ட சின்னாற்றுப் படுகையில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக நேற்று வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ஒகேனக்கல் வனச்சரகர் சேகர் தலைமையிலான குழுவினர், அப்பகுதிக்கு சென்று யானையை ஆய்வு செய்தனர். உயிரிழந்த யானைக்கு சுமார் 35 வயது இருக்கும் எனவும், அது ‘மக்னா’ வகையைச் சேர்ந்த ஆண் யானை என தெரியவந்தது.
ஜீன் குறைபாடு காரணமாக தந்தங்கள் இல்லாத ஆண் யானைக்கு, ‘மக்னா’ என்று பெயர். உயிரிழந்த ‘மக்னா’ யானையின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், அது 4 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் வந்து யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர் யானையின் உடல் அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
யானையின் உயிரிழப்புக்கு காரணம் உடல் நலக்குறைவா, விஷக்காய் மற்றும் தாவரத்தை உண்டதா அல்லது மாசுபட்ட குடிநீரை பருகியதா என பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பின்னரே தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.