Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

சென்னை மாநகரப் பகுதிகளில் மக்கள் தன்னிச்சையாக பணிகளை மேற்கொள்ள கூடாது: சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை

சென்னை

சென்னை மாநகரப் பகுதிகளில் கழிவுநீர் அடைப்பை நீக்குதல் போன்ற பணிகளை பொதுமக்கள் தன்னிச்சையாக மேற்கொள்ளக் கூடாது என்று சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டஅனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் அடைப்புகளை சரி செய்தல்,சுத்தம் செய்தல் மற்றும் அவற்றைச்சார்ந்த அனைத்து பணிகளும் குடிநீர் வாரியம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது மக்களின் வீடு மற்றும் பொது இடங்களில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் அடைப்பு குறித்த புகார்களை சென்னை குடிநீர் வாரியத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் 044 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

பாதாள சாக்கடையை பாதுகாப்பற்ற முறையிலும், உரிய கவசங்கள் அணியாமலும் சுத்தம் செய்தல் மற்றும் நுழைவு வாயிலில் சட்டத்துக்கு புறம்பாக நுழைவது குறித்த புகார்களை ‘சஃபாய் மித்ரா சுரக்ஷா சேலஞ்ச்' திட்டத்தின் கீழ் ‘14420' என்ற தேசிய உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கழிவுநீர் அடைப்பை சரி செய்யும்போதும், பராமரிப்புபணிகளை மேற்கொள்ளும்போதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் பணியாளர்களை கழிவுநீர் குழிக்குள் இறங்க விடாமலும், பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம், கையுறை, பாதுகாப்பு உடை மற்றும் காலணிகள் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிகளைப் பின்பற்றியும் நவீன இயந்திரங்களை முழுமையாக பயன்படுத்தியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் பொது இடங்களில் ஏற்படும் கழிவுநீர் அடைப்பு மற்றும் பிறபராமரிப்பு பணிகளை தன்னிச்சையாகவோ அல்லது ஒப்பந்ததாரர்மூலமாகவோ மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறான பணிகள், சென்னை குடிநீர் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வாரியத்தின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

கழிவு நீர் அடைப்பு ஏற்படும் பட்சத்தில், வீட்டின் உரிமையாளர், வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்களின் உரிமையாளர், தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சுத்தம் செய்யும் பணியாளர்களை தன்னிச்சையாக நேரடியாக ஈடுபடுத்தி அதனால் கழிவுநீர் குழியில் விஷவாயுதாக்கி இறக்க நேரிட்டால், இறந்த பணியாளரின் குடும்பத்துக்கு தலாரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கு முழுப் பொறுப்பாவார்கள்.

மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதமாக ரூ.2 லட்சம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறுவோர் மீது 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதமாக ரூ.5 லட்சம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இறந்த பணியாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவராக இருந்தால், 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது வாழ்நாள் சிறைத் தண்டணை விதிக்கப்படும். கடமைதவறுதல் பிரிவில் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x