

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்களும் வியாபாரிகளும் குவிந்ததால் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு, ஃபைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. மீன்களை வாங்க விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அதிகளவு கூட்டம் சேருவதை கட்டுப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
மேலும், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்குள் வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வரும்படி மீன்வளத் துறையின் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அமாவாசை தினம் என்றாலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், வியாபாரிகள் நேற்று அதிகாலை முதலே காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்கு வரத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
மீன்களை வாங்க வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். இருப்பினும், சமூக இடைவெளி பெரிதாக கடைப்பிடிக்கப்படவில்லை. இதேபோல், சென்னையின் பிற பகுதிகளில் உள்ள நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீன் விற்பனை சந்தைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.