சென்னை குடிநீர் தேவைக்காக அடுத்த மாதம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறப்பு: குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை குடிநீர் தேவைக்காக அடுத்த மாதம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறப்பு: குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் அடுத்த மாதம் திறந்துவிடப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு முதல்தவணையாக 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளில் போதிய அளவு நீர் உள்ளபோதிலும், கோடைகாலத்தின் கூடுதல் தண்ணீர் தேவை, ஏரிகளில் தண்ணீர் ஆவியாதல் போன்றவற்றால், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீரைப் பெற தமிழக அரசின் பொதுப்பணித் துறை முடிவு செய்தது.

அதன்படி, ஆந்திர மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகளை, தமிழக பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் தொடர்பு கொண்டனர். ஆந்திர மாநில அணைகளில், குறிப்பாக சைலம், சோமசீலா, கண்டலேறு அணைகளில் போதிய அளவு நீர் இருப்பதால், கிருஷ்ணா நதி நீரைத் திறந்துவிட ஆந்திர மாநில அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி, மே மாதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீசைலம் அணையிலிருந்து கிருஷ்ணா நீர் சோமசீலா அணைக்கும், அங்கிருந்து கண்டலேறு அணைக்கும் திறந்துவிடப்படும். கண்டலேறு அணையில் திறக்கப்படும் கிருஷ்ணா நீர், பூண்டி ஏரியை வந்தடையும்.

மொத்தம் 215.81 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சைலம் அணையில் 34.10 டிஎம்சி (15.80 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது. 78 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோமசீலா அணையில் 57.95 டிஎம்சி (74.29 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது. அதேபோல, 68.03 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 49.66 டிஎம்சி (73 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது.

கண்டலேறு அணையில் கணிசமான அளவுக்கு நீர் இருப்பதால், சென்னை குடிநீர் தேவைக்காக அடுத்த மாதம் முதல் வாரத்தில் கிருஷ்ணா நதி நீர் திறக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in