Published : 19 Dec 2015 08:15 AM
Last Updated : 19 Dec 2015 08:15 AM

கனமழையால் சேதமான சாலைகள், சிறுபாலங்களை சீரமைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு

கனமழையால் சேதமான சாலை கள் மற்றும் சிறுபாலங்களை சீரமைக்க தமிழக அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சாலைகள் மற்றும் சிறு பாலங்களை உடனடியாக சீரமைக்க தமிழக அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததில் அதிகம் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு (திருவள்ளூர் ரூ.26 கோடி, காஞ்சிபுரம் ரூ.24 கோடி, கடலூர் ரூ.24 கோடி மற்றும் சென்னை ரூ.12.75 கோடி) மொத்தம் ரூ.86.75 கோடியும், வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள பிற மாவட்டங்களுக்கு ரூ.63.25 கோடியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை சாலை களில் ஏற்பட்ட 109 சாலை உடைப்புகளில் 106 சாலை உடைப்புகள் சரி செய்யப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது. வெள்ள சேதத்தினால் சாலைகளில் 254 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த சாலை மற்றும் பாலச் சீரமைப்பு பணிகளை வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிக்கவும், 7 இடங்களில் மாற்று தரைப் பாலங்களை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் கட்டி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

30 நாட்களில்..

நெடுஞ்சாலைத்துறை சாலை கள் மற்றும் சிறுபாலங்களைத் தற்காலிகமாக சீரமைக்க தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காஞ்சி புரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களுக்கு தலா ரூ.12 கோடியும், சென்னை மாவட்டத்துக்கு ரூ.6 கோடியும், மேலும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள இதர 8 மாவட்டங்களில் உடனடி சீரமைப்புக்காக ரூ.8 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக பணிகளை போர்க் கால அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட்டு 30 நாட்களுக்கு முடிக்கவும், திருவள்ளூர் மாவட்டத்தில் பழுதடைந்த 4 பெரிய பாலங்களை (திருத்தணி நாகலாபுரம், கனகம்மாசத்திரம் தக்கோலம், கொரட்டூர் தின்னனூர் - பெரிய பாளையம், காஞ்சிபுரம் - வந்தவாசி) சீரமைக்கும் பணியை 45 நாட்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

570 கி.மீ. சாலைகளில்..

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இதுவரையில் 570 கி.மீ. சாலைகளில் தற்காலிக வெள்ள சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x