

சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகேவுள்ள நடை மேம்பாலத்தில் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே தற்காலிகமாக இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பாலத்தை கடந்து செல்கிறார்கள். நடை மேம்பாலம் உயரமாகவும் பெரிய படிகளைக் கொண்டதாகவும் உள்ளதால் முதியோர், மாற்றுத் திறனா ளிகள் இதில் ஏற சிரமப்பட்டு வருகின்றனர்.
இங்கு சென்ட்ரலில் இருந்து வருவோருக்கு வசதியாக ஒரு புறத்தில் மட்டும் எஸ்கலேட்டர் வசதி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வசதியை பூங்கா ரயில் நிலையத்தின் முன்பகுதியிலும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நடை மேம்பாலத்தில் ஏற வசதியாக பூங்கா ரயில் நிலையத்தின் முன்பகுதியில் புதிய எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், அங்கு தற்காலிகமாக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தவுடன் தற்காலிக பாலம் அகற்றப்படும். அதுவரையில் மக்கள் எளிதாக மேம்பாலத்தை கடந்து செல்லும் வகையில் ரூ.1 கோடி செலவில் புதிய எஸ்கலேட்டர் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். இதற்கிடையே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் நிலையங்களுக்கு செல்லும் வழிகள், மாநகராட்சிக்கு செல்லும் வழிகள் என தனித்தனியாக நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.