வாக்குப்பதிவின் போது தடியடி நடத்திய உதவி காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: காட்பாடி குடியாத்தம் சாலையில் பொதுமக்கள் மறியல்

காட்பாடி -குடியாத்தம் சாலை சென்னாங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
காட்பாடி -குடியாத்தம் சாலை சென்னாங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

வாக்குப்பதிவின்போது பொது மக்கள் மீது தடியடி நடத்திய உதவி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி காட் பாடி - குடியாத்தம் சாலையில் பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேவரிஷிக்குப்பம் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்களிக்க பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.

அப்போது, வாக்குச்சாவடிக்கு அருகாமையில் பொதுமக்கள் கூட்டமாக நின்றுக்கொண்டிருந் தனர். அந்த நேரத்தில் அங்கு தேர்தல் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் தேவபிரகாசம் என்பவர் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.

லேசான தடியடி

ஆனால், பொதுமக்கள் அங்கிருந்து செல்லாமல் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். இதைத்கண்ட உதவி காவல் ஆய்வாளர் தேவபிரகாசம் பொதுமக்களை அவதூறாக பேசி. அவர்கள் மீது லேசான தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் நடைபெற்று 5 நாட்களான நிலையில், உதவி காவல் ஆய்வாளர் தேவபிரகாசம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேவரிஷிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கே.வி.குப்பம் அடுத்த சென்னாங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியலில் ஈடுபட்ட பொது மக்களுக்கு ஆதரவு தெரிவித்த திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் பங்கேற்று உதவி காவல் ஆய்வாளர் தேவபிரகாசம் மீது மாவட்ட காவல் துறை அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி முழக்கம் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

பிறகு, உதவி காவல் ஆய்வாளர் தேவபிரகாசம் வெளியூரைச் சேர்ந்தவர் தேர்தல் பணிக்காகவே அவர் இங்கு வந்தார். தேர்தல் முடிந்த பிறகு அவரது பகுதிக்கு சென்றுவிட்டார். இருப்பினும், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in