

கரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியதன் எதிரொலியாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
கரோனா ஊரடங்கில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுக்கு பிறகு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்தாண்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை கணிசமான எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதே நேரத்தில் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங் கியுள்ளது. கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் பல மடங்கு உயர்ந்துள்ளது. உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இதனால், கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், பேருந்துகளில் நின்றுக் கொண்டு பயணம் அனுமதியில்லை, கார் மற்றும் ஆட்டோக்களின் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதன் எதிரொலியாக, தி.மலை அண்ணாமலையார் கோயில், பக்தர்கள் கூட்டமின்றி நேற்று வெறிச்சோடியது. உள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெளியூர் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை குறைந்திருந்தது. கரோனா தொற்று பரவலை தடுக்க பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதும், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டதும், பக்தர்களின் வருகை குறைந்ததுக்கு காரணமாக உள்ளது.
இதேபோல், மாவட்டத்தில் உள்ள பிற வழிபாட்டுத் தலங்கள், சாத்தனூர் அணை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் மக்களின் வருகை குறைந்தே காணப்பட்டது.