Published : 11 Apr 2021 07:50 PM
Last Updated : 11 Apr 2021 07:50 PM

செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் நனைந்து 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்: நிர்வாகம் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு  

திருவண்ணாமலை

செய்யாறு பகுதியில் ஞாயிற்றுகிழமை பெய்த திடீர் மழையால், ஒழுங்குமுறை விற்பனை கூட திறந்தவெளி களத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெறுகிறது. தினசரி அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள், விற்பனைக்காக தனியார் மண்டிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இதனால், செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நெல் மூட்டை வரத்து அதிகரித்தால், இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கிடங்கு நிரம்பிய காரணத்தால், திறந்தவெளி களத்தில் நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்யாறு பகுதியில் ஞாயிற்றுகிழமை திடீரென பெய்த கோடை மழையால், திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளது.

மேலும் நனையாமல் தடுக்க, தார்பாய் பயன்படுத்தி விவசாயிகள் மூடினர். மழையில் நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அவர்கள் கூறும்போது, “செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் மூட்டைகளை வைக்க 6 கிடங்குகள் இருக்கிறது.

அவை முழுமையாக நிரம்பியதால், திறந்த வெளி களத்தில் நெல் மூட்டைகள் குவிக்கப்பட்டது. கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகள் எடை போட்ட பிறகும், அதனை வியாபாரிகள் கொண்டு செல்லாததால், திறந்தவெளி இடத்தில் நெல் மூட்டைகளை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகளை கடந்த 2 நாட்களாக எடை போடவில்லை. பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே நெல் சாகுபடி செய்து வருகிறோம். மழையில் நெல் மூட்டைகளை நனைவதை பார்க்கும்போது, எங்களது இதயமே வெடித்துவிடும் போல் உள்ளது. எங்களது உழைப்பு முழுவதும் வீணானது. எதிர்காலத்தில், இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க, எடை போடப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் வெளியேற்றவும், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கவும் ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x