

தூத்துக்குடியில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தலைமைக் காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பணியாற்றிய காவல் நிலையம் மூடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. சமீபத்தில் தேர்தல் பொதுக்கூட்டங்களில் கட்டுப்பாடின்றி மக்கள் கூட்டம், கூட்டமாக பங்கேற்றனர். கரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் இருந்த போதிலும் அவற்றை அரசியல் கட்சியினர் கண்டுகொள்ளவில்லை. இதனால் கரோனா தொற்று தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் ஒருவருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத் தொடர்ந்து அந்த போலீஸ் நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் போலீஸ் நிலையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்தனர்.
மேலும், அவருடன் பணியாற்றிய மற்ற போலீசாருக்கும் கரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தலைமைக் காவலர் கரோனா தடுப்பூசி முதல் டோஸை கடந்த சில தினங்களுக்கு முன்பு போட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.