

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட கொடைக்கானலுக்கு இன்று அதிக எண்ணிக்கையில் சுற்றுலாபயணிகள் வருகைதந்தனர். இதனால் சுற்றுலாத்தலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்க இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள் என பல்வேறு வகைகளை நாடி வருகின்றனர் மக்கள்.
சிலர் கோடைவாசஸ்தலமான கொடைக்கானலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். தேர்தல் முடியும்வரை கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் வருகை குறைந்திருந்தநிலையில், தேர்தல் நடந்து முடிந்தபிறகு வாரவிடுமுறையான கடந்த இருதினங்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சுற்றுலாத்தலங்களான பிரையண்ட்பூங்கா, மோயர்பாய்ண்ட், குணாகுகை, தூண்பாறை, கோக்கர்ஸ்வாக் ஆகிய இடங்களில் சுற்றுலாபயணிகள் அதிகம் காணப்பட்டனர்.
தூண்பாறைகளை மேகக்கூட்டங்கள் தழுவிச்செல்லும் இயற்கை காட்சியை கண்டுரசித்தனர். ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரைச்சவாரி செய்தனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியம் வெப்பநிலை நிலவியது. குறைந்தபட்சமாக இரவில் 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.
பகலில் இதமான தட்பவெப்பநிலை நிலவியதால் தரைப்பகுதியில் வெயிலால் அவதிப்பட்டு வந்த சுற்றுலாபயணிகள், கொடைக்கானலில் இதமான தட்பவெப்பநிலையை உணர்ந்தனர்.
இன்று மாலை 4 மணிக்கு மேல் கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்யத்தொடங்கி விட்டுவிட்டு பெய்தது. லேசான குளிர் காற்றால் ரம்மியமான தட்பவெப்பநிலை நிலவியது.
கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் கொடைக்கானல் சுற்றுலாத்தலத்திற்கு செல்ல அனுமதிப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் கோடை சீசனுக்கு முன்னதாகவே கொடைக்கானல் சென்றுவந்துவிடவேண்டும் என பலரும் முயல்வதால், இனி வாரவிடுமுறை நாட்கள் மட்டுமின்றி வழக்கமான நாட்களிலும் கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சுற்றுலாயபணிகளை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சிறுவியாபாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுலாபயணிகளுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த ஆங்காங்கே முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபாரதம் விதிக்கும் பணியிலும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.