

காங்கிரஸ் வேட்பாளர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அறிந்து மிகவும் வருந்துகிறேன், பொதுவாழ்வில் இருக்கும் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:
“ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் கரோனா பெருந்தொற்று சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற துயரமிகு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் - சட்டமன்ற உறுப்பினராக தமிழகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்க வேண்டிய அவரது திடீர் மறைவு அத்தொகுதி மக்களுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாழ்வில் இருக்கும் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் - அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.