பேருந்துகளில் அமர்ந்தபடி பயணிக்க மட்டுமே அனுமதி: அலுவலக நேரங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிக்கல்

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி, பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகர பேருந்துகளில் சிரமமின்றி பயணம் செய்ய வசதியாக சென்னை கோயம்பேடு மாநகர பேருந்து வளாகத்தில் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள். படங்கள்: ம.பிரபு
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி, பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகர பேருந்துகளில் சிரமமின்றி பயணம் செய்ய வசதியாக சென்னை கோயம்பேடு மாநகர பேருந்து வளாகத்தில் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள். படங்கள்: ம.பிரபு
Updated on
1 min read

பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும், நின்று கொண்டு பயணிக்கக் கூடாது என்ற புதிய கட்டுப்பாடு நேற்று முதல் அமலானது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால், தமிழக அரசு நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணிகள்அமர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் அதிகமாக ஏறுவதைநடத்துநர்களும் அனுமதிக்கவில்லை. இவற்றை பேருந்து நிலையங்களில் போக்குவரத்து கழக அதிகாரிகள் நின்று கொண்டு ஆய்வு செய்தனர். பல இடங்களில் முகக்கவசம் இல்லாத பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

சென்னையிலும் பல்வேறு வழித்தடங்களில் 300-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இருப்பினும், அலுவலக நேரங்களில் சில பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், நடத்துநர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திங்கள் போன்ற வார நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக நடந்துநர்கள் சிலர் கூறும்போது, ‘‘சமூக இடைவெளியின்றி பயணிகள் ஒரே நேரத்தில் கூட்டமாக கூடுவதால், அவர்களை கட்டுப்படுத்துவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. ஒரு சிலர்வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்’’ என்றனர்.

இதுதொடர்பாக போக்குவரத்துகழக அதிகாரிகள் கூறியதாவது:கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பேருந்துகளை இயக்கி வருகிறோம். சமூக இடைவெளியை பின்பற்றி, கூட்ட நெரிசலைக் குறைக்க அதிகாரிகளை நியமித்து ஆங்காங்கே ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகிறோம். நின்று கொண்டு பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற பெரிய நகரங்களில் இயக்கப்படும் நகர, மாநகர பேருந்துகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் நடைமுறை சிக்கல் இருக்கின்றது. இருப்பினும், பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. இதுதவிர தேவையான அளவுக்கு பேருந்துகளை கூடுதலாக இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in