

உத்தராகண்ட் மாநிலத்தைப் போலதமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சத்குரு கூறியுள்ளதாவது:
உத்தராகண்ட் மாநில அரசு 51 கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துள்ள செய்திமகிழ்ச்சியளிக்கிறது. சமீபத்தில், அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட இந்தக் கோயில்கள் மீண்டும்சமூகத்திடமே வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு மிகப்பெரிய படி. கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை உத்தராகண்ட் அரசு உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது.
இந்த முடிவை எடுத்த அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு என்னுடைய வாழ்த்துகளையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வரவேற்கத்தக்க இந்த நடவடிக்கையை மற்ற மாநில முதல்வர்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிற மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை விடுவிப்பது, உத்தராகண்ட் போன்று எளிமையாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், விருப்பம் இருந்தால் எத்தகைய சிக்கலுக்கும் நம்மால் தீர்வு காண முடியும். தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசும் இதுபோன்ற ஒரு முடிவை எடுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு சத்குரு தெரிவித்துள்ளார்.
மேலும், வீடியோவுடன் சேர்த்துசத்குரு வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், “கோயில்களை விடுவிக்கும் இயக்கத்தை ஆதரித்ததற்கு, முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கும், உத்தரகாண்ட் அரசு, ஊடகங்கள், 3 கோடிக்கும் மேலான மக்கள், ஆன்மிக, மதத் தலைவர்கள் மற்றும்அனைவருக்கும் பாராட்டுகள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்திக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.