

தஞ்சாவூர் மேல வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராகவன்(26). ஒரத்தநாடு அருகே பொட்டலங் குடிக்காட்டைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் மாதேஸ்வரன்(18). நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சாவூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் கீழே விழுந்து காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த அவர்களின் நண்பர்கள் வண்டிக்காரத் தெருவைசேர்ந்த ராமச்சந்திரன்(27), எம்.ராகவன்(23) ஆகியோர் இருவரையும் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் அருண்பாண்டியன், காயம் அடைந்தவர்களிடம் விபத்து மற்றும் காயம் குறித்து விசாரித்தார்.
அப்போது, மதுபோதையில் இருந்த மாதேஸ்வரன், ராகவன் உள்ளிட்ட 4 பேரும், மருத்துவர் அருண்பாண்டியனை தரக்குறைவாக பேசியதுடன், தாக்கவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை மருத்துவமனையில் இருந்தவர்கள் பிடிக்க முயன்றபோது, அனைவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
தொடர்ந்து, இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்த அருண்பாண்டியன் மற்றும் சக மருத்துவர்கள், தொடர்புடைய நபர்களை கைது செய்யக் கோரி நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தஞ்சாவூர் டவுன் டிஎஸ்பி பாரதிராஜன், கோட்டாட்சியர் வேலுமணி, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர், அருண்பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராகவன், மாதேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரன், எம்.ராகவன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இதற்கிடையே, சம்பவம் பற்றிஅறிந்த ஆட்சியர் ம.கோவிந்தராவ், நள்ளிரவிலேயே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுமருத்துவர்களிடம் விசாரித்தார்.