Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

துணை முதல்வர் மாமியார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி நேரில் ஆறுதல்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள்(91). இவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வசித்து வந்தார். முதுமை காரணமாக இவர் கடந்த 7-ம் தேதி இரவு காலமானார். இவரது உடல் உத்தமபாளையத்தில் கடந்த 8-ம் தேதி தகனம் செய்யப்பட்டது.

அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன், ஓ.எஸ்.மணியன், அரசு கொறடா ராஜேந்திரன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உட்பட பலர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி சேலத்தில் இருந்து கார் மூலம் நேற்று காலை 11.30 மணிக்கு உத்தமபாளையம் வந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோரை சந்தித்து ஆறுதல்கூறினார். தொடர்ந்து வள்ளியம்மாள் உருவப் படத்துக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ராஜலட்சுமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட பலர் உடன் இருந்தனர். சிறிது நேரம் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினருடன் பேசிவிட்டு பகல் 12.20 மணிக்கு முதல்வர் மதுரை சென்று, விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x