Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

புதுச்சேரியில் அமலுக்கு வந்த கரோனா கட்டுப்பாடுகள்: தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களே அனுமதி

புதுச்சேரியில் கரோனா தடுப்புக்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது. தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் கரோனா தாக்கத்தின் 2-வது அலை பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குகள், புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் புதிய விதிமுறைகளை வகுத்துள்ள அம்மாநில அரசு, இதை மீறினால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என பொதுமக்களை எச்சரித்துள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தி வருகிறார். மேலும், புதிய விதிகளைஅறிவித்த அவர் அவற்றை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி புதுச்சேரியில் கரோனா புதிய கட்டுப்பாடுகள்நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக ஓட்டல்கள், மால் உள்ளிட்ட வணிக வளாகங்களில் 50 சதவீத நபர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தாமதமாக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவர்களுக்கு நுழைவுவாயிலில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே வளாகத்துக்குள் அனுமதித்தனர்.

மேலும், முகக்கவசம் அணியாமல் சாலைகளில் நின்றவர்களை ஆங்காங்கே சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸார் தடுத்து நிறுத்தி ரூ.100 அபராதம் வசூலித்தனர். பேருந்துகளில் பயணிகள் நின்று செல்ல நடத்துநர்கள் அனுமதிக்கவில்லை.

இரவு 12 மணிமுதல் அதிகாலை5 மணி வரை கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. குடும்ப,சமய, இலக்கிய விழாக்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கும் வகையில் ஒரு இருக்கை விட்டு பொதுமக்கள் அமருமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டனர். மேலும், வழிபாட்டுத் தலங்கள் இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. கடற்கரை பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் கும்பலாக நின்றவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். இந்தப் புதிய கட்டுப்பாடுகளால் சில இடங்களில் பொதுமக்களும் சிரமப்பட்டனர்.

இதனிடையே இன்று 100 இடங்களில் கரோனா சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் மாநில சுகாதாரத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட சில துறைகள் ஈடுபட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x