Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

சிறுமிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனது கல்லீரலை அளித்த தாய்- 20 மணி நேரம் சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்

கோவை

திருச்சியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், ‘சிறுமியின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. கல்லீரல் செயல்பாடும் குறைவாக உள்ளதால் உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்' என்று பெற்றோரிடம் தெரிவித்தனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் கடந்த மார்ச் 10-ம் தேதி சிறுமியை பெற்றோர் அனுமதித்தனர். அங்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிறுமி நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

இதுதொடர்பாக கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் கே.ஜி.பக்தவச்சலம் கூறியதாவது: ஹெபடைடிஸ் வைரஸ் காரணமாக சிறுமியின் கல்லீரல் செயல்திறன் பாதிக்கப்பட்டது. இவ்வாறு செயலிழப்பு ஏற்பட்டால் உடலில் உள்ள அசுத்த பொருட்கள் வெளியேறாது. பித்தம் உள்ளேயே தங்கியிருந்தால் ரத்தம் மாசடைந்து மயக்கம் வரும். உடல் பலவீனமடையும். எது சாப்பிட்டாலும் வாந்தி வரும்.

எனவே, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறுமியின் தாய் தனது கல்லீரலை அளிக்க முன்வந்தார். பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 2 விதங்களில் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று, மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைப் பெற்று, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்வது. 2-வது, உயிருடன் இருப்பவர்களிடமிருந்து ஓர் உறுப்பைப் பெற்று, அறுவைசிகிச்சை மேற்கொள்வது. 2-வது வகை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, சிக்கல்கள் நிறைந்தது. இதை மேற்கொள்ள ஒரே நேரத்தில் 2 அறுவை சிகிச்சை அரங்குகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

அதன்படி, சிறுமியின் தாயிடமிருந்து கல்லீரலின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டு, உடனடியாக குழந்தைக்கு பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது 2 முறை சிறுமியின் இதயத் துடிப்பு நின்றுபோனது. இருப்பினும், மருத்துவர்கள் முயற்சி செய்து துடிப்பை மீட்டுக் கொண்டு வந்தனர். இந்த சிகிச்சையை மேற்கொண்டு முடிக்க 20 மணி நேரம் ஆனது. இவ்வாறு உயிரோடு இருக்கும் ஒருவரிடம் கல்லீரல் தானமாக பெறப்பட்டு வெற்றிகரமாக கே.ஜி. மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இது 2-வது முறையாகும்.

ரூ.20 லட்சம் செலவில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிக்கலான இந்த அறுவை சிகிச்சையின் வெற்றிக்கு காரணமான மருத்துவர்கள் கார்த்திக் மதிவாணன், தியாகராஜன், ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பாராட்டுக்குரியவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x