

அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் நடைபெற்றுவரும் கிராமங்களில் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கடந்த 4 வாரங்களாக 5 கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டப் பணிகளையொட்டி, அவிநாசி அருகே கருமாபாளையம் - மடத்துப்பாளையம் சாலையில் குழாய் பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. கருமாபாளையம், செம்மாண்டாம்பாளையம், பாரதி நகர், கோகுலம் நகர், பாரதி நகர் பகுதிகளில் சுமார் 300 குடிநீர் இணைப்புகள் உள்ளன. அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிக்காக, கருமாபாளையம் சாலையில் சங்கமாங்குளம், தாமரைக்குளத்துக்கு செல்வதற்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட பகுதியில் 3 கி.மீ. நீளத்துக்கு பாறை தரிசு நிலமாக இருப்பதால், ஒப்பந்ததாரர் உரிய நேரத்தில் பணியை முடிக்கவில்லை.
600 மீட்டர் நீளத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், எங்களுக்கான ஆற்று குடிநீர் மற்றும் ஆழ்குழாய் நீர் கிடைப்பதில்லை. கடந்த 20 நாட்களாக தண்ணீருக்கு மிகுந்த சிரமப்படுகிறோம். பலரும் போதிய தண்ணீர் கிடைக்காததால், 4 கி.மீ. தூரம் அவிநாசி, தண்ணீர் பந்தல் பகுதிகளுக்கு சென்று எடுத்து வருகிறோம்" என்றனர்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் செயற்பொறியாளர் சிவலிங்கம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "குடிநீர் மற்றும் பிஎஸ்என்எல் இணைப்பு உள்ள பகுதிகளில், 24 மணி நேரத்துக்குள் திட்டப் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருமாபாளையம் பகுதியில் குடிநீர் பாதிப்பு இருப்பது தொடர்பாக உடனடியாக விசாரிக்கிறேன்" என்றார்.