Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

கோவை - பாலக்காடு இடையே கடந்த 5 ஆண்டுகளில் ரயிலில் அடிபட்டு 8 யானைகள் உயிரிழப்பு

கோவை

கோவை - பாலக்காடு வழித்தடத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 8 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

கோவை நவக்கரை அருகே கடந்த மார்ச் 15-ம் தேதி கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஆண் யானை உயிரிழந்தது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, கோவை போத்தனூர் - பாலக்காடு வழித்தடத்தில் யானைகள் அடிக்கடி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது தொடர்பாக, தெற்கு ரயில்வேயிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் கேட்டிருந்தார்.

அதற்கு பாலக்காடு கோட்ட மூத்த பொறியாளர் ஆனந்தராமன் அளித்த பதிலில், “கஞ்சிக்கோடு - மதுக்கரை இடையிலான ஏ லைன் மற்றும் பி லைன் ரயில் தண்டவாளங்கள் வனப்பகுதியை ஒட்டி செல்வதால் அடிக்கடி யானை மீது ரயில்கள் மோதும் விபத்துகள் நடைபெறுகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 8 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை சுமார் 1 கி.மீ தூரம், தண்டவாளத்தின் இருபுறமும் சீர் செய்வதற்கு மொத்தம் ரூ.4.02கோடி செலவிடப்பட்டுள்ளது. அதனை மேலும் 7.50 கிமீ தூரத்துக்கு அகலப்படுத்துவதற்கு 2021-ல் ரூ.3 கோடியே 10 லட்சம் அளவுக்கு ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்வு என்ன?

யானைகள் மீது ரயில் மோதாமல் இருப்பதற்கான தீர்வுகள் குறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, “இரவு நேரத்தில் பி லைனில் ரயில் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். இன்ஜின் ஓட்டுநர்கள் கொடுக்கப்பட்டுள்ள வேக வரம்பை எவ்வாறு கடைபிடிக்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ தூரம் ஓட்டுநர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் இருபுறமும் உள்ள செடிகொடிகள் வெட்டப்பட வேண்டும்.

ரயில் தூரத்தில் வரும்போதே யானைகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் சென்சார்கள் அமைக்கப்பட்டு ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட வேண்டும். ரயில்வே தெரிவித்துள்ள இந்த யானை பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகள், பொதுமக்கள், தன்னார்வலர்களை சேர்த்து குழு அமைக்க வேண்டும். இவை அனைத்தும் நடைமுறைபடுத்தப்பட்டால் மட்டுமே ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க முடியும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x