

சென்னை பகுதிகளில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலம் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை பாலவாக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வீடுகள்தோறும் சென்று மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பாலவாக்கம் மாநகராட்சிப் பூங்காவில் நடைபெற்று வரும் காய்ச்சல் பரிசோதனை முகாமை அவர் பார்வையிட்டார். பின்னர், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காய்ச்சல், சளி மட்டுமின்றி, வயிற்றுப்போக்கு, சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தாலும், வீடு வீடாக வரக்கூடிய மாநகராட்சி களப் பணியாளர்களிடம் பொதுமக்கள் தயக்கமின்றித் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், கரோனா பாதிப்புகள் இருந்தால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.
சென்னையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. எனினும், தடுப்பூசி போடாத, 45-வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்னும் 10 லட்சத்துக்கும் மேல் இருக்கின்றனர். எனவே, அனைவரும் தாமாக முன்வந்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், 10 நாட்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிபோடும் பணியை நிறைவு செய்துவிடலாம். வீடு வீடாகச் செல்லும் களப் பணியாளர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில், தடுப்பூசி போடாதவர்களைக் கணக்கெடுத்து வருகின்றனர்.
போதுமான அளவு கையிருப்பு
சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும். எனவே, சுணக்கம் காட்டாமல் தடுப்பூசியை விரைவாக போட்டுக்கொள்வது நல்லது. கரோனா தடுப்பூசிபோடும் பணியை சிறப்பாக மேற்கொள்ள, குடியிருப்போர் நலச் சங்கங்கள் முன்வர வேண்டும். சென்னையில் தடுப்பூசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, தேனாம்பேட்டை மண்டலத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதன்பிறகு, கோடம்பாக்கம், அண்ணா நகர்,அம்பத்தூர், திருவிக நகர், அடையாறு உள்ளிட்ட மண்டலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.
சென்னையில் உள்ள கடற்கரைகளில் நேரக் கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். காலை மட்டும் அனுமதித்துவிட்டு, அதன் பிறகு நாள் முழுவதும் மூடலாமா என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.
80 சந்தைகள்
கோயம்பேடு தவிர்த்து சென்னையில் 80 சந்தைகள் உள்ளன. இதில், காசிமேடு மீன் விற்பனை சந்தையில் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக வருவதுதான் எங்களுக்கு சவாலாக உள்ளது. அதை எப்படி ஒழுங்குப்படுத்துவது என்று மீன் வளத் துறை இயக்குநருடன் ஆலோசித்து வருகிறோம். இதற்கு ஒரிரு நாட்களில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.