

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்குள் முகக்கவசம் அணியாவிட்டால் அனுமதி இல்லை என்று மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் விசைப்படகு, ஃபைபர் படகு உள்ளிட்டவை மூலம் கடலுக்குச் சென்று, மீன் பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை ஏலம் விடுவது, விற்பனை செய்வது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், நூற்றுக்கணக்கான மீனவர்கள், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்கு வந்து, செல்கின்றனர்.
எனினும், மீனவர்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். எனவே, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்குள் முகக்கவசம் அணியாவிட்டால் அனுமதிஇல்லை என்று மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்குள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு அணியாவிட்டால், துறைமுகத்துக்குள் செல்ல அனுமதி இல்லை என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இதுதவிர, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவுவாயிலில் கைகழுவும் திரவங்களை வைப்பது உள்ளிட்ட கரோனா தடுப்புநடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். மேலும், மீனவர்கள் மத்தியில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள்குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.