Published : 11 Apr 2021 03:16 am

Updated : 11 Apr 2021 10:19 am

 

Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 10:19 AM

கோடை நோய்களைத் தடுப்பது எப்படி?

summer-diseases

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி?

வியர்க்குரு


மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வசாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியைத் தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில்உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும்.

இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குருவில் காலமின் லோஷனைப் பூசினால் அரிப்பு குறையும்.

வேனல் கட்டி

தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள, அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதுதான் வேனல் கட்டி. இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.

பூஞ்சை தொற்று

உடலில், ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். படையைக் குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரைத் தடவிவர இது குணமாகும். உள்ளாடைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் பூஞ்சை படை வருவது தடுக்கப்படும்.

நீர்க்கடுப்பு

கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகத் தொல்லைதரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால், சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறையத் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.

தொற்றுநோய்கள்

வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய்க்கிருமிகள் அபரிமிதமாகப் பெருகும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். ஆகையால், வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது. உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டியதும் முக்கியம். தண்ணீரைக் கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.

தண்ணீர்! தண்ணீர்!

மணிக்கொரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். குளிரூட் டப்பட்ட அறையில் இருந்தால்கூட, தாகம் எடுக்கவில்லை என்றாலும், கோடைக் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.

குளிர் பானங்கள் வேண்டாம்!

வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாயு நிரப்பப்பட்ட செயற்கை குளிர் பானங்களைக் குடிக்க வேண்டாம். காரணம், குளிர் பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, ரத்தக் குழாய்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.

இதற்குப் பதிலாக, இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. எலுமிச்சைப் பழச் சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.

- கு.கணேசன், மருத்துவர்.


கோடை நோய்கள்Summer diseasesSummerவியர்க்குரு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x