

நமது கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.
ஏரியில் தூர் வாருதல், கரையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளதால் ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர் மட்டம் மளமளவென குறைந்தது.
இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டது.
இதற்கு மாற்று ஏற்பாடாக வடலூர் அருகே உள்ள வாலாஜா ஏரியில் இருந்து பரவனாற்றில் தண்ணீர் விட்டு, அதை ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது பரவனாற்றில் இருந்து வினாடிக்கு 15 கன தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வாலாஜா ஏரியில் தேக்கி வைக்கப்படுகின்றது. வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும், தற்போது ஏரியில் 5.5 அடி தண்ணீர் உள்ளது. இந்த ஏரி சுமார் 1,600 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது.
மேலும் தண்ணீர் தேவை ஏற்பட்டால் வடலூரில் இருந்து பண்ருட்டி வரை போடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட போர்வெல்லில் இருந்தும் தண்ணீர் எடுக்க மெட்ரோ வாட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்து வைக்க பல குடிநீர் ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும், ஆபத்துக்கு உதவும் ஆபத்பாந்தவனாக இருப்பது நம் கடலூர் மாவட்ட ஏரிகளே.