சுமை தூக்கும் தொழிலாளியின் மகள் இந்திய கால்பந்து அணிக்கு கேப்டன்

தாய், தந்தையுடன் இந்துமதி
தாய், தந்தையுடன் இந்துமதி
Updated on
2 min read

இந்தியாவில் அடுத்த ஆண்டு (ஜன.20- பிப். 6) பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது.

இதற்கு தயாராகும் விதமாக சமீபத்தில் துருக்கி சென்ற இந்திய பெண்கள் அணி, செர்பியா, ரஷ்யா, உக்ரைன் அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்றது.

தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்திய அணி, உஸ்பெகிஸ்தான் (ஏப். 5), பெலாரஸ் (ஏப். 8) அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்றது.

இப்போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக தமிழக மத்திய கள வீராங்கனை இந்துமதி (26) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூரைச் சேர்ந்த இவர் சுமைதூக்கும் தொழிலாளியின் மகள் ஆவார். கடந்த 2014ல் இந்துமதி இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 34 போட்டிகளில் 12 கோல் அடித்துள்ளார். தமிழக காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இது குறித்து மஞ்சக்குப்பம் மார்க்கெட் பகுதியில் மூட்டை தூக்கி கொண்டிருந்த கதிரேசனிடம் பேசினோம்.

“நான் கடந்த 30 வருடங்களாக மார்க்கெட் பகுதியில் மூட்டை தூக்கி வருகிறேன். எனக்கு 2மகள்கள், 1 மகன் உள்ளனர். முதல் மகள் நந்தினிக்கு திருமணமாகி விட்டது. 2 வது மகள் இந்திமதி கடலூர் வேணுகோபாலபுரத்தில் உள்ள பெண்கள் பள்ளியில் படிக்கும் போதே கால்பந்து விளையாட்டில் ஆர்வமுடன் இருப்பார். அவர் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அவருக்கு கோச்சராக மாரியப்பன் இருந்து ஊக்கிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’வில் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது. அங்கும் அவர் கால்பந்து அணியில் விளையாடி வந்தார்.

இந்த நிலையில் தமிழக காவல்துறை மூலம் இந்திய அணியுடன் உஸ்பெகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

‘கதிரேசன் மகள் இந்துமதி’ என்று சொல்வதற்கு பதிலாக ‘இந்துமதியின் தந்தை கதிரேசன்’ என்று எனது மகள் சொல்ல வைத்து விட்டார்” என்றார்

அதைச் சொல்ல சற்றே அவர் கண்ணில் நீர் ததும்ப, அது ஆனந்த கண்ணீர் என்பதை நம்மால் உணர முடிந்தது.

“இந்த மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் திக்குமுக்காடி போயிருக்கிறோம்” என்கிறார் இந்துமதியின் தாயார் அமுதா. இவர்களது மகன் தீபன்ராஜ் (23) சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் சிறிய வீட்டில் இவர்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்துமதி மேலும் பல சாதனைகளை படைத்து, நம் கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க நம் ‘இந்து தமிழ் திசை’ வாழ்த்துகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in