

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆதீவாலீஸ்வரர் கோயில் குளத்தில் நகராட்சி நிர்வாகம் நாள்தோறும் சேரும் குப்பைகளை தொடர்ந்து கொட்டி வந்தது. குப்பைகள் நிரம்பி மைதானமாக மாற்றப்பட்ட குளத்தில் ‘டாக்ஸி ஸ்டாண்ட்’ அமைக்கப்பட்டது. பின்னர் அங்கு அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள் நடத்தி வந்தன.
இந்நிலையில் தமிழக அரசு ரூ 1.50 கோடி ஒதுக்கீடு செய்து, பூங்காவுடன் இக்குளத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.
இதையொட்டி சுமார் 500 மீட்டர் தூரத்தில் அய்யனார் கோயில் குளம் ஒன்று உள்ளது. திருவிக தெருவில், ஆஞ்சநேயர் கோயில் பின்புறம் உள்ள இந்தக் குளத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 5-ம் தேதி தெப்ப உற்சவம் நடத்தப்படும்.
இக்குளத்தைச் சுற்றியுள்ள ஐயனார் குளத்தெரு, திருவிக தெரு, ராஜகோபால் தெருக்களின் வழியாக வழிந்தோடி வரும் மழை நீர், இந்தக் குளத்தில் விழுந்து நிரம்புவது வழக்கம்.ஆனால், நீண்ட காலமாக குளத்தில் தண்ணீரின்றி வறட்சியாக காட்சியளிகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் குளம் சீரமைக்கப்பட்டது. சுற்றுப்புற சுவர்கள் அமைக்கப்பட்டது. குளத்தின் உள்பகுதியில் மைய மண்டபத்தைச் சுற்றி ஆழமெடுத்து கட்டமைப்பை சீர்படுத்தினர். மழைநீர் சேகரிப்பிற்கான கட்டமைப்பையும் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், போதிய மழையின்மையால், மோட்டார் மூலம் தண்ணீரை நிரப்பி, ஆண்டு தோறும் தெப்ப உற்சவம் நடத்தி வருகின்றனர்.
தெற்கு மற்றும் வடக்கு அய்யனார் குளத் தெருவில் உள்ள வாய்க்கால்களில் கழிவுநீர் வருவதால் அந்நீர் குளத்திற்கு செல்லக் கூடாது என அடைக்கப்பட்டது. அதனால் மழைநீர் செல்லக்கூடிய வாய்க்கால்களும் அடைபட்டு போனது. மழைநீர் செல்லக்கூடிய வாய்க்கால்களில் உள்ள அடைப்பை நீக்கினால் மட்டுமே குளத்திற்கு நீர் வரத்து பெருகும்.
கழிவு நீரின்றி, சாலைகளில் வழிந்தோடும் மழை நீரை இந்தக் குளத்தில் சேகரிக்க இந்து அறநிலையத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பலமுறை இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டும் பதில் பெற இயலவில்லை.
“அருகில் உள்ள ஒரு குளத்திற்கு ரூ. 1.50 கோடி செலவு செய்து, மீட்டெத்த நிலையில், அதே கையோடு இந்தக் குளத்தையும் சரி செய்திருக்கலாம். வரும் நாட்களில் அவசியம் இதை சரி செய்ய வேண்டும்” என்று விழுப்புரம் நகரவாசிகள் தெரிவிக் கின்றனர்.