கிராமப்புற மருத்துவச் சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்

விருதுடன் மருத்துவர் கவுஷிகா
விருதுடன் மருத்துவர் கவுஷிகா
Updated on
1 min read

‘நோயற்ற வாழ்வே குறை வற்ற செல்வம்’ என்ற முதுமொழியை அண்மைக் காலமாக அணைவரும் நன்கு உணர்ந்திருக்கிறோம். அதை நோக்கியே நம்மில் பலர், பல வித மருத்துவ முறைகளில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

விவரம் அறிந்த நம்மில் பலரே, பெரு நோய்கள் வந்தால் படும் பாடு சொல்லி மாளாது. அதிலும், கிராமப்புற எளிய மனிதர்கள் சரியான மருத்துவ வழிகாட்டுதல் இன்றி படும் இன்னல்கள் ஏராளம்.

அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்துக் கொடுப்பது அரசின் இன்றியமையா கடமைகளில் ஒன்று. இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப் புறங்களில் வசித்து வரும் நிலையில், 70 சதவீத மருத்துவர்கள் நகர்புறங்களில் சேவையாற்றி வருவது வருத்தப்பட வேண்டிய முரண்.

இத்தகைய சூழலில் கிராமப்புற மருத்துவச் சேவையை தனது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு, அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் நெய்வேலியைச் சேர்ந்த மருத்துவர் கவுஷிகா.

கடந்த 2019-ம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்த கவுஷிகா, கேரள மாநிலத்தில் கிராமப் புறத்தில் தனியார் மூலம் ஓராண்டு மருத்துவச் சேவையாற்றி வந்தார். பின்னர் தமிழகத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவன மருத்துவமனை மூலம் கிராமப்புற மருத்துவச் சேவையாற்றி வருகிறார்.

புனேவில் உள்ள வாழ்க்கை மற்றும் சுகாதார சேவைகளுக்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம், சுகாதாரத் துறையில் எளிய மக்களுக்கான மருத்துவ சேவையாற்றும் மருத்துவர், பல் மருத்துவர், மருத்துவமனை மற்றும் நிறுவனங்களைக் கண்டறிந்து ஆண்டு தோறும் கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு கிராமப் புற சேவையில் சிறந்த பங்காற்றிய கவுஷிகாவுக்கு ‘கிராமப்புற சேவைகளில் சிறந்த மருத்துவர்’ என்ற விருதை கடந்த மாதம் வழங்கி, கவுரவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 24 மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்றனர். அதில் ஒருவராக நமது நெய்வேலி ஊரகப் பகுதி மக்களுக்காக பணியாற்றி வரும் கவுஷிகாவும் விருதைப் பெற்றிருக்கிறார். தொடர்ந்து கிராமப்புற பகுதிகளிலேயே தனது சேவையைத் தொடர விரும்புவதாக தெரிவிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in