Last Updated : 11 Apr, 2021 03:16 AM

 

Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

தேனி மக்கள் ரயிலை பார்த்து 11 ஆண்டுகள் ஆச்சு: அகலப்பாதையாக மாற்றும் பணியில் தொடரும் காலதாமதம்

தேனி ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர், முன்பதிவு, பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

போடி

போடி-மதுரை அகல ரயில்பாதை பணிக்காக கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பல்வேறு இடையூறுகள், சிரமங்களுக்கு மத்தியில் தேனி வரை பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. சில மாதங்களில் ரயில் இயக்கத்துக்கான வாய்ப்புகள் உள்ளன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை ஆகிய தாலுகா பகுதிகளில் ஏலத்தோட்டங்கள் அதிகம் உள்ளன. இங்கு விளையும் ஏலக்காய்கள் பெரும்பாலும் வடமாநிலங்களுக்கும் அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. பிரிட்டிஷ் காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் ஏலக்காய் வர்த்தகத்துக்காக போடியில் இருந்து மதுரை வரை ரயிலுக்கான வழித்தடத்தை ஏற்படுத்தினர். மீட்டர்கேஜை விட குறைவான அகலத்திலேயே அப்போது தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. இந்த ரயிலை 20-11-1928-ம் தேதி சென்னை மாகாண வருவாய் உறுப்பினர் நார்மன் மார்ஜோரிபேங்க்ஸ் தொடங்கி வைத்தார்.

11 ஆண்டுகளுக்கு முன்பு

இரண்டாவது உலகப்போரின் போது 1942-ம் ஆண்டில் ரயில் நிறுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1953-54-ம் ஆண்டு இந்த வழித்தடம் மீட்டர்கேஜ் பாதையாக மாற்றப்பட்டது. கரி மற்றும் டீசல் இன்ஜின்கள் என இந்த ரயில் அடுத்தடுத்து முகம் மாறிக்கொண்டது. இந்நிலையில் இதனை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக 2010 டிசம்பரில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

90 கி.மீ. தூரம் உள்ள இந்த மீட்டர்கேஜ் பாதையை ரூ.450 கோடி மதிப்பீட்டில் அகலப்பாதையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. ஆரம்பத்தில் குறைவான நிதி ஒதுக்கீடு மற்றும் அரசியல் அழுத்தம் இல்லாததால் இப்பணி பல ஆண்டுகளாக கிடப்பிலே போடப்பட்டது. பின்பு மீண்டும் இப்பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 37 கி.மீ. தூரத்துக்கான பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடந்தது. பின்பு உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையிலான 15 கி.மீ. தூரத்துக்கு கடந்த அக்டோபரில் சோதனை ஓட்டம் முடிந்தது.

உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையிலான பகுதியில் மலைப்பகுதி குறுக்கிடுகிறது. மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இப்பாதையில் ரயில்கள் செல்லும் நிலை இருந்தது. அகல ரயில் இயக்கத்துக்காக இங்கு மேலும் 23 மீ. உயரம், 10 அடி அகலத்துக்கு பாதை அகலப்படுத்தப்பட்டது. இதற்காக வெடி வைத்து பாறைகளை அகற்றுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இருப்பினும் பணிகள் முடிந்து கடந்த நவம்பரில் சோதனை ஓட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை 17 கி.மீ. தூரம் பணிகள் முடிந்து மார்ச் 3-ம் தேதி ரயில் இன்ஜின் சோதனை நடந்தது. இதில் தண்டவாளத்தின் தாங்கும் தன்மை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் ஆராயப்பட்டன. தொடர்ந்து ரயில்வே கேட் அமைத்தல், சமிக்ஞை பிரிவு மூலம் சிக்னல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் பெருமளவு முடிவடைந்துள்ளன.

தேனி ரயில் நிலையம்

தற்போது தேனி ரயில் நிலையத்தில் நடைமேடைக்கான மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் ரயில் நிலைய கட்டுமானப் பணியும் விரைவில் முடிவடைய உள்ளது. இதில் பயணியர் காத்திருப்பு அறை, முன்பதிவு அலுவலகம் உள்ளிட்ட பல வசதிகள் அமைய இருக்கிறது. இதற்கு அருகிலேயே விருந்தினர் அறைகளும் கட்டப்பட்டு வருகின்றன.

மதுரையில் இருந்து தேனி வரை ஏப்ரல் முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று கடந்த ஆண்டில் இருந்து கூறப்பட்டு வந்தது. இருப்பினும் மேலும் சில மாதங்கள் தாமதமாகவே வாய்ப்புள்ளது. தண்டவாளங்கள் சீரமைப்பு, தேனி ரயில் நிலையத்தில் முடிக்க வேண்டிய கட்டுமானப் பணிகள் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மேலும் ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக அருகில் வாழையாத்துப்பட்டி வரையே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் இன்ஜின்களை மாற்றுவதற்கான வசதி இல்லாத நிலை உள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதன்பின்புதான் மதுரையில் இருந்து தேனி வரை ரயில்கள் இயக்க முடியும்.

ஏறத்தாழ தேனி மாவட்டத்தில் ரயில்கள் இயங்கி 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. வருவாய் குறைந்த வழித்தடம் என்பதால் ரயில்வே நிர்வாகம் தன்னிச்சையான அக்கறைகளை மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் ரயில்வே பயணிகள் சங்கம், போராட்டக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே அவ்வப்போது பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் தேனி வரை விரைவில் ரயில்கள் இயங்கும் என்ற நம்பிக்கையில் இம்மாவட்ட மக்கள் உள்ளனர்.

தாமதமாகும் போடி வழித்தடம்

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினையால் தாமதம் ஏற்பட்டது. இந்த பாதையில் 50-க்கும் மேற்பட்ட சிறுபாலங்கள் அமைக்க வேண்டியிருந்தது. இதற்காக பிரிட்டிஷ் காலத்து கட்டுமானங்கள் அகற்றப்பட்டன. தொடர் மழை, நீர்த்தேக்கம், கரோனாவினால் இடம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள், ஆண்டிபட்டி கணவாய்பாதை அகலப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் போன்றவற்றினால் நிர்ணயித்த ஆண்டுக்குள் முடிக்க முடியவில்லை. தற்போது பணிகள் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளன. சில மாதங்களில் பணிகள் முடிந்து நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்றதும் தேனிக்கு ரயில்கள் இயக்கப்படும். வாழையாத்துப்பட்டி அருகே மேம்பாலம் அமைக்க வேண்டியுள்ளதால் போடிக்கு ரயிலை இயக்க மேலும் தாமதமாகும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x