

அசோலா நுண்ணுயிர் பயன்பாட்டின் மூலம் விளைநிலங்களின் வேதியியல் தன்மையை குறைக்கலாம் என்று வேளாண் மாணவியர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இறுதியாண்டு மாணவியர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் போடி அருகே சிலமலையில் களப்பணி ஆற்றினர். அங்குள்ள விவசாயிகளுக்கு அசோலா உரம் தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர். க.சுமா, ம.ஜான்சி, த.பத்மலோஷினி, லோ.நாகசிவபாரதி, சே.ஐஸ்வர்யா, மு.திவ்யபவதாரணி ஆகியோர் இது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்ததாவது, இவற்றை தயாரிக்க முதலில் குழிதோண்டி அதன்மேல் தார்பாய் விரித்து அதன் முனைகளை களிமண்ணினால் மூடி விட வேண்டும். பின்பு தார்ப்பாய் மேல் தண்ணீர் ஊற்றி அதில் மாட்டுச்சாணம், மணல்களை இட்டு சிறிதளவு அசோலா நுண்ணுயிரையும் போட வேண்டும். 21 நாளில் இது படர்ந்து, அடர்ந்து வளர்ந்து விடும். அவ்வப்போது எடுத்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இவற்றை நெல்லுக்கு உரமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் நிலத்துக்கான யூரியா உரத்தின் தேவை குறையும். இதனால் மண்ணின் வேதியியல் தன்மையும் குறையும். நிலத்துக்கு நைட்ரஜன் சத்தும் அதிகளவில் கிடைக்கும்.
அசோலா ஒரு ஏக்கருக்கு 10 முதல் 50 கிலோ வரை தழைச்சத்தை தரக்கூடியது. மேலும் 5 முதல் 6 சதவீதம் வரை சாம்பல் சத்தையும்அளிக்கிறது. அசோலாவை மாட்டு தீவனமாகவும், கோழித் தீவனமாகவும் பயன்படுத்தலாம். இதனை பச்சையாகவோ, பதப்படுத்தியோ பயன்படுத்தலாம்.
மேலும் 1 கிலோ ரூ.25 வரை விற்பனையும் செய்யலாம் இவ்வாறு அவர்கள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து இக்கிராமத்தில் விளைந்துள்ள பல்வேறு பயிர்கள் குறித்து ஆய்வு செய்தனர்.