

திண்டுக்கல் நகரில் கடந்த எட்டு ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக புறநகர் பகுதி மக்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொதுப்போக்குவரத்து வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் நகரில் இருந்து சிலுவத்தூர் செல்லும் சாலையின் குறுக்கே திண்டுக்கல்-பழநி, திண்டுக்கல்-கரூர், திண்டுக்கல்-திருச்சி என மூன்று ரயில்பாதைகள் அடுத்தடுத்து கடந்து செல்கின்றன. மூன்று ரயில்பாதைகளிலும் அடிக்கடி ரயில்கள் செல்வதால் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அடிக்கடி ரயில்வே கேட்கள் மூடப்பட்டு வந்தது. இதனால் திண்டுக்கல் புறநகர் பகுதியான மாசிலாமணிபுரம், கோவிந்தராஜ்நகர், சந்துருநகர் மற்றும் சிலுவத்தூர் சாலை வழியாக செல்லும் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிக நேரம் காத்திருந்து ரயில்பாதை குறுக்கிடும் இடத்தை கடக்க வேண்டிய நிலை இருந்தது.
ரயில்வே பணி நிறைவு
எனவே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பலனாக கடந்த 2013-ம் ஆண்டு மூன்று ரயில்பாதைகளையும் தடையின்றி கடந்து செல்லும் வகையில் நீண்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில நிர்வாகம் தொடங்கியது. நிலம் கையகப்படுத்தும் பணியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இதுவரை முழுமையாக நிலம் கையகப்படுத்தி கட்டுமானப் பணிகளை மாநில நிர்வாகத்தால் செய்ய முடியவில்லை.
ஆனால் ரயில்வே நிர்வாகம் ரயில் தண்டவாளங்கள் கடந்து செல்லும் பகுதிக்கு மேலே மூன்று ரயில்பாதைகளுக்கு மேல் மேம்பாலங்களையும், மூன்று இடங்களிலும் ரயில்பாதைகளுக்கு கீழே சுரங்கப்பாதையையும் அமைத்து தனது பணியை முடித்துவிட்டது. ரயில்வே நிர்வாகம் செய்த பணிகளுக்கு இணைப்பு ஏற்படுத்தினால்தான் இந்த பாலத்தில் முழுமையாக பயணிக்க முடியும். இதற்கு மாநில அரசு நிர்வாகம் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் கையகப்படுத்த நிலங்களை முழுமையாக ஒப்படைக்காமல் நில உரிமையாளர்கள் கூடுதல் இழப்பீடு நிதி கேட்டு வருகின்றனர். இதனால் மீதமுள்ள பகுதிகளில் மேம்பாலம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல் கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
பாலப் பணி தாமதம் காரணமாக பாதிக்கப்படும் மக்கள் பலமுறை போராட்டங்கள், மறியல், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் ரயில் மறியல் என பல போராட்டங்களை தொடர்ந்து நடத்திவந்தனர். இருந்தபோதும் பாலம் கட்டும் பணி விரைவுபடுத்தப்படவில்லை. ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் வந்து பாலப் பணிக்கு கையகப்படுத்தப்பட்ட இடங்களை பார்ப்பதும், பின்னர் விரைவில் பணிகள் முடிவடையும் எனக் கூறுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்தது.
இதனால் போக்குவரத்து வசதியின்றி பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம், மாசிலாமணிபுரம், கோவிந்தராஜ்நகர், சந்துரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருசக்கர வாகனங்களில் மட்டுமே நகர்ப்புறங்களுக்கு வரமுடியும் என்ற நிலை நீடிக்கிறது. இந்த வழியாக சிலுவத்தூர், ராஜக்காபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பத்துக்கு மேற்பட்ட கிராமமக்கள் 10 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்லவேண்டிய நிலையும் தொடர்கிறது.
வழக்கமான பதில்
இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நகர்ப்புறத்தில் 23 பேரிடமும், ஊராட்சி பகுதியில் 72 பேரிடமும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அரசின் இழப்பீடு போதாது எனக் கூறி நில உரிமையாளர்கள் நிலத்தை ஒப்படைக்க தாமதித்து வந்தனர். இந்த தாமத்தால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன.
நிலம் வழங்கிய ஊராட்சிப் பகுதியில் உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் நிலங்கள் முழுமையாக ஒப்படைக்கப்பட்டு விட்டன. நகர்ப்புறங்களில் உள்ளவர்களிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி நிலங்களை கையகப்படுத்தி வருகிறோம். 98 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இனி விரைவாக பாலப் பணிகள் நடைபெறும் என்றனர்.
இது வழக்கமான பதிலா அல்லது விரைவில் பாலம் பணி நடந்து முடியுமா என்ற சந்தேகப் பார்வைதான் மக்கள் மத்தியில் தொடர்கிறது. காரணம் இந்தப் பாலம் கட்டும் பணிக்காக மக்களிடம் பல உறுதிமொழிகளை கொடுத்தும் அவற்றை நிறைவேற்றுவதில் தொடர்ந்து சிக்கலை சந்தித்து வந்துள்ளது மாவட்ட நிர்வாகம். வழக்கமாக ரயில்வே மேம்பாலம் கட்டும் இடங்களில் மாநில நிர்வாகம் பாலம் பணிகளை முடித்துவிட, ரயில்பாதை கடக்கும் இடத்தில் மட்டும் பாலம் கட்டுவதில் ரயில்வே நிர்வாகம்தான் தாமதப்படுத்தும்.
ஆனால் இங்கு ரயில் நிர்வாகம் தனது பணிகளை விரைந்து முடித்துவிட மாநில நிர்வாகமோ கடந்த எட்டு ஆண்டுகளாக பாலம் பணிகளை முடிப்பதில் தாமதித்து வருகிறது. இதனால் திண்டுக்கல் புறநகர் பகுதி மக்கள் மற்றும் பத்துக்கு மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்துப் பிரச்சினை கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்கிறது.
வீணான பயணிகள் நிழற்கூரை
திண்டுக்கல்லில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மற்றும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சிலுவத்தூர் சாலையில் ரயில்வே பாலம் பணி கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால் பேருந்துகள் இந்த சாலையில் இயக்கப்படுவதில்லை. பேருந்துகளே செல்லாத சாலையில் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் 2016-17 நிதியாண்டில் சட்டசபை உறுப்பினர் நிதியின் கீழ் பயணிகள் நிழற்கூரை ரூ.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது.
அப்போதே பலரும், மேம்பாலப் பணி ஆண்டுக் கணக்கில் தொடர்கிறது. எப்பொழுது முடியும் என தெரியவில்லை. வேறு பயனுள்ள இடத்தில் இந்த நிதியை பயன்படுத்தலாம். இந்த இடத்தில் போக்குவரத்து தொடங்கிய பிறகு பயணிகள் நிழற்கூரை அமைக்கலாம் எனக் கருத்து தெரிவித்தனர். ஆனால் நிதி வந்துவிட்டது என்பதற்காக பேருந்தே செல்லாத பகுதியில் அவசரமாக நிழற்கூரையை அமைத்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த பயணிகள் நிழற்கூரை பயன்படாமலேயே உள்ளது.