

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க நோயாளிகள் வாரக் கணக்கில் காத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனை 2012 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் புறநோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
உள்நோயாளிகளாக 700-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர் பை, பித்தப்பை போன்ற உள்ளுறுப்புகள் பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதுதவிர வயிற்று வலி, இதர வயிறு பிரச்சினையால் பாதிக்கப்படுவோர், கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.
இதற்காக மருத்துவமனையில் 4 ஸ்கேன்கள் உள்ளன. ஆனால், உள் நோயாளிகளாக இருந்தால் மட்டுமே ஸ்கேன் எடுக்கப்படுகிறது. அவர் களுக்கும் ஒருவாரம் கழித்தே ஸ்கேன் எடுக்கப்படுகிறது. புறநோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்கப்படுவதில்லை. அவர் களை அங்குள்ளவர்கள் தனியார் ஸ்கேன் மையத்துக்குச் செல்லுமாறு நிர்பந்தம் செய்கின்றனர்.
மேலும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் ஸ்கேன் எடுக்கும் ரேடியாலஜி பிரிவில் கடந்த காலங்களில் பேராசிரியர் உட்பட 7 பேர் இருந்தனர். ஆனால், தற் போது பேராசிரியர் மாற்றுப்பணியில் மதுரை மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இணைப் பேராசிரியர் பணி யிடம் காலியாக உள்ளது. மூன்று உதவி பேராசிரியர்கள் மட்டுமே ஸ்கேன் எடுக்கின்றனர். அவர்கள் பணிப்பளுவைக் காரணம் காட்டி குறைந்த நபர்களுக்கே ஸ்கேன் எடுக்கின்றனர்.
இதுகுறித்து நோயாளிகள் சிலர் கூறுகையில், ‘சாதாரண வயிற்று வலி பிரச்சினைக்கே உள்நோயாளியாக தங்கினால்தான் ஸ்கேன் எடுக்க முடியும் என்கின்றனர். இல்லாவிட்டால் வெளியில் எடுக்க சொல்கின்றனர். இதனால் வசதி இல்லாதவர்கள் சாதாரண வயிற்று வலியாக இருந்தாலும் ஒரு வாரம் உள்நோயாளியாக தங்கி ஸ்கேன் எடுக்கின்றனர். வசதி படைத்தவர்கள் பணம் செலவழித்து வெளியில் எடுத்து கொள்கின்றனர். தனியார் மையத்தில் ஸ்கேன் எடுக்க ரூ.800 முதல் ரூ.1200 வரை வசூலிக்கின்றனர்.
இந்த தனியார் மையங்களில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களே ஸ்கேன் எடுக்கின்றனர். ஆனால் மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளில் ஒரே நாளில் ஸ்கேன் எடுக்கின்றனர். இப்பிரச் சினையில் கல்லூரி டீன் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தினர் கூறுகையில், ‘ ரேடியாலஜிஸ்ட் 3 பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் தினமும் 50 பேருக்கு ஸ்கேன் எடுக்கின் றனர். அவசரம் கருதி உடனுக்குடன் எடுக்கின்றனர். இதுதவிர சிடி ஸ்கேன் எடுக்கின்றனர். கரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் சிடி ஸ்கேன் எடுப்பதும் அதிகரித்துள்ளது. மூன்று பேரில் ஒருவர் விடுப்பு எடுத்தாலும் உள்நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுப் பதே சிரமமாக உள்ளது. இதனால் புறநோயாளிகளுக்கு ஸ்கேன் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது,’ என்று கூறினர்.