

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி திமுக சார்பில் அலங்காநல்லூரில் வரும் 28-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை தமிழக வீர விளையாட்டு ஆர்வலர்கள் அமைப்பினர் நேற்று சந்தித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அதற்கு நானே தலைமை தாங்குவேன் என்றும் அறிவித்திருந்தேன். அதற்காக தமிழ்நாடு வீர விளையாட்டு ஆர்வலர்கள் அமைப்பினர் என்னையும், கருணாநிதியையும் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட திமுக சார்பில் அலங்காநல்லூரில் வரும் 28-ம் தேதி எனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் திருப்தி அளிப்பதாக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து. உண்மையில் நிவாரணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அனைத்துக் கட்சி குழுவை அமைத்து அவர்கள் மூலமாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
முதல்வர் ஜெயலலிதாவின் வாட்ஸ் அப் உரை அதிகாரப்பூர்வமான செய்தியா என்பதை அவரே விளக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் வாட்ஸ் அப் மூலம் உரையாற்றுவதால் எந்தப் பலனும் இல்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.