

வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்த நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1.56 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக் கையை அதிகரிக்க சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகங்கள் ஆயத்தமாகி வருகின்றன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் அலை கரோனா பரவலின் போது அதிகப்படியான பரிசோதனைகள் நடத்தப்பட்டு பாதிக்கப் பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊரடங்கு, தொடர் பரிசோதனை, சிகிச்சைகளால் கரோனா பரவல் வேகம் குறைய ஆரம்பித்தது.
இதற்கிடையில், கரோனா இரண்டாம் அலையால் தொற்றுப் பரவல் எண்ணிக்கை தீவிரமாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் பணி மாவட்டந்தோறும் தீவிரம்அடைந்துள்ளது. முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடை வெளியை கடைபிடிக்காவிட்டால் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேநேரம், கரோனா பரிசோதனையைக் காட்டிலும் கரோனா தடுப்பூசியை அதிக நபர்களுக்கு செலுத்துவதன் மூலம் தீவிர நோய் பரவலின் தீவிரத்தையும் செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கும் நிலைக்கு செல்வதை தவிர்க்க முடியும் என்பதுடன் உயிரிழப்பு விகிதத்தையும் கட்டுப் படுத்த முடியும் என சுகாதாரத் துறையினர் கருதுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்ளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து, காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி நிர்வாக பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் களின் எண்ணிக்கை 1 லட்சத்து 789 -ஆக அதிகரித்துள்ளது. மாவட் டத்தில் தினசரி சராசரியாக 2,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகின்றன. இந்த எண்ணிக் கையை 3,500-ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், 45 வயதுக்கு மேற்பட்டோ ருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாகவும் கரோனா சிகிச்சைக்காக 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாக வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் தெரிவித்தார்.
அதேபோல், வேலூர் மாநகராட்சியில் இதுவரை 30,938 பேர் முதற்கட்ட தடுப்பூசியும் இரண்டாம் கட்டமாக 893 பேரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மாநகராட்சியில் கரோனா பரவல் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் மட்டும் 200 சதவீதமாக இருக்கும் நிலையில், தினசரி காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவ துடன் கரோனா தடுப்பூசி முகாமில் அதிகளவில் பொதுமக்களை பங்கேற்க நடவடிக்கை எடுத்துள் ளதாக மாநகர நல அலுவலர் டாக்டர் சித்ரசேனா தெரிவித்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 24,500 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கையிருப்பில் 15 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்தை இருப்பு வைத்துள்ளனர்.
மாவட்டத்தில் தொழிற்சாலை கள் அதிகம் இருப்பதால் அங்கு பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அவர்களின் இருப்பிடத்திலேயே நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ஒரு நபருக்கு ரூ.250 வீதம் கட்டணம் வசூலிக்க உள்ளனர். இதற்கு, தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள 41 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மணிமாறன் தெரிவித்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 30,764 பேருக்கு முதற்கட்டமாகவும், 3 ஆயிரத்து 428 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. வரும் நாட்களில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையை தினசரி 4,500- ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 1.56 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் வரும் நாட்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களை இலக்கு வைத்து சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த ஆயத்தமாகி வருகின்றனர்.