

மாமல்லபுரத்தில் கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள ரேடிசன் ப்ளூ ரிசார்ட்டை இடிக்க, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் ரேடிசன் ப்ளூ ரிசார்ட், கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளுக்கு முரணாக எழுப்பியுள்ள கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவர் நலச்சங்க தலைவர் செல்வராஜ் குமார் என்பவர், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமலும், கடலோர மண்டல ஒழுங்குமுறையின் ஒப்புதல் இல்லாமலும், கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டுமானங்களை இடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, ''கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளின்படி அனுமதி பெறாமல், மாமல்லபுரம் கடற்கரையில் ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் 1,100.37 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட கட்டிடங்களை 2 மாதங்களுக்குள் அந்நிறுவனமே இடித்து அகற்ற வேண்டும். இல்லையென்றால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 10 கோடி ரூபாயை இழப்பீடாக, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு செலுத்த வேண்டும்'' எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடற்கரையிலிருந்து 200-500 மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்களை வரைமுறைப்படுத்த மத்திய அரசை அணுக ரிசார்ட் நிர்வாகத்துக்கு அனுமதியளித்த தீர்ப்பாயம், அதுவரை அந்தக் கட்டுமானங்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.