Published : 10 Apr 2021 02:09 PM
Last Updated : 10 Apr 2021 02:09 PM

உரவிலையை 58% உயர்த்தி விவசாயிகள் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் மத்திய அரசு: ஸ்டாலின் கண்டனம்

ஒருபுறம் உரவிலையை 58 விழுக்காடு உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றும், மத்திய பாஜக அரசின் துரோகத்தை, தமிழக மக்களும், விவசாயிகளும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் வகையில் 58 சதவீத உரவிலை உயர்வின் மூலம் - 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலையை 1200 ரூபாயிலிருந்து 1900 ரூபாயாகச் செங்குத்தாக உயர்த்தியிருப்பதற்கும், சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அராஜகமாகக் கலைத்திருப்பதற்கும் திமுக சார்பில் மத்திய பாஜக அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசுவதற்குக் கூட மனமில்லாத - மார்க்கம் தெரியாத - மனிதாபிமானமற்ற மத்திய பாஜக அரசு, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பாழ்படுத்தும் வகையில் உரவிலையை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த டி.ஏ.பி. உர விலை உயர்வைத் தொடர்ந்து என்.பி.கே. உரங்களின் விலையும் 50 சதவீதம் வரை உயர்ந்து - இன்றைக்கு நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஜனநாயக உரிமைகளுக்காக - தங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகளை பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல. உரவிலையைக் கண்டித்து நாடுமுழுவதும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஆங்காங்கு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

இதன் பிறகு “உரவிலை உயர்வு இப்போதைக்கு கிடையாது” என்று மட்டும் ஒப்புக்காக ஒரு அறிவிப்பு மத்திய பாஜக அரசு தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத் தேர்தல் முடிந்தவுடன் இந்த விலையேற்றத்தைச் செயல்படுத்துவதற்கான ஒத்திகையே இந்த அறிவிப்பு.

ஏற்கனவே சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து விட்டு - பிறகு திரும்பப் பெற்றது இந்த அரசு. இப்போது உர விலையை உயர்த்தி விட்டு “இப்போது அமல்படுத்தமாட்டோம்” என்று விவசாயிகளின் வாழ்வுடன் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை விவசாயிகளும், தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்கமாட்டார்கள்”


இவ்வாறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x