

அரக்கோணம் இரட்டைக் கொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (26), சூர்யா (26) ஆகிய இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இதில், அர்ஜூனனுக்குத் திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகியுள்ளன. அவர்களின் நண்பர்கள் மதன், வல்லரசு, சவுந்தர்ராஜ் ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருமாள்ராஜபேட்டை இளைஞர்கள் சராமரியாகத் தாக்கியதே இதற்குக்காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினர் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் குடும்பத்தினரை நேற்று இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இருவரது குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இரட்டைக் கொலையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பங்கு கொண்ட திருமாவளவன் பேசும்போது, “ தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்க உள்ளது. அதனால் ஏற்பட்ட விரக்தியின் விளைவாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் விசிக கட்சியினர் தாக்கப்பட்டனர்.
அரக்கோணம் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்குச் சேகரித்த இளைஞர்கள் தாக்கப்பட்டனர். இந்தக் கொலையில் தொடர்புடைய 20 பேரும் கைது செய்யப்பட வேண்டும். காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தியே விசிகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தீவிரமாக செயல்படுவது இல்லை. வழக்கையும் முறையாகப் பதிவு செய்வதும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்டப்படியான நிதியையும் வழங்குவதில்லை. இந்தப் போக்கு வருத்தத்துக்குரியது, கண்டத்துக்குரியது” என்றார்