

கரூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது பெற்றோரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் பேரூராட்சி பிச்சம்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் திங்கள்கிழமை பாலியல் பலாத் காரம் செய்து கொல்லப்பட்டார். இவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் இது தொடர்பாக விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உதவி இயக்குநர் ராமசாமி, விசாரணை அலுவலர் இனியன் ஆகியோர் வியாழக்கிழமை பிச்சம்பட்டி வந்தனர்.
பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொல்லப்பட்டதாக கூறப்படும் வெற்றிலை கொடிக்கால் பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோர், சகோதரிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உதவி இயக்குநர் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியது: தாழ்த்தப்பட்ட இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இச்சம்பவத்தில் போலீஸாரின் நடவடிக்கை திருப்தியாக இருக்கிறது என்றோ, இல்லை என்றோ கூறமுடியாது.
தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடி ஆணையத்தால் வழங்கப்படும் நஷ்டஈடு இந்த குடும்பத்துக்கு வழங்கப்படும். பாலியல் பலாத்கார சம்பவத்தில் தாழ்த்தப்பட்டோர் அல்லாதவர் ஈடுபட்டது தெரியவந்தால் அவர்களை வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்வதுடன், அதற்கான நஷ்டஈட்டை பெற்றுத்தருவோம்.
இந்த பகுதியில் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாமல் உள்ளது எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, இதற்கான அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சமர்ப்பிப்போம் என்றார்.